search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறையூர் கோவில்"

    திருச்சி அருகே கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம் பாளையம் கிராமத்தில் வண்டித்துரை கருப்புச்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை மண்ணச்சநல்லூரை சேர்ந்த தனபால் (வயது 55) நடத்தி வந்தார்.

    இந்த கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அப்போது பிடிக்காசு வாங்க முண்டியடித்து சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் மாவட்டம் நன்னியூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (60), கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராஜவேல் (55), பின்னாத்தூர் பூங்காவனம் (50), சேலம் மாவட்டம் திருமானூர் மங்களாபுரம் காந்தாயி (38), நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கோனாட்சி மரம் சாந்தி (50), பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை புள்ளான்குளம் ராமர் (50), விழுப்புரம் மாவட்டம் வடபொன்பரப்பி வள்ளி (35) ஆகிய 7 பேர் உயிரிழந்தனர்.

    12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு திருச்சி கலெக்டர் சிவராசு, மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து துறையூர் போலீசார் கோவில் பூசாரி தனபால் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2)-ன் கீழ் (எதிர்பாராமல் நடந்த விபத்தில் இறப்புக்கு காரணமாக இருத்தல்) வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் சிவராசு கூறுகையில், கோவிலில் பிடிகாசு தீரப்போவதாக பக்தர்களிடம் திடீரென வதந்தி பரவி உள்ளது. அதை நம்பி வேகமாக கோவிலுக்குள் சென்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் சிலர் முண்டியடித்து உள்ளே செல்ல முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. தனியார் கோவிலாக இருந்தாலும் விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை. இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றார்.

    கைதான பூசாரி தனபால் அடிப்படையில் டெய்லர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் மண்ணச்சநல்லூர் பகுதியிலும், துறையூர் நகரின் ஒரு பகுதியிலும் இதே போல் கருப்புசாமி கோவில் நடத்தி வந்துள்ளார். கோவில் நடத்திய இடங்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முத்தையம்பாளையத்திற்கு இடம் பெயர்ந்து வந்துள்ளார். அங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கோவிலை நடத்தி வந்துள்ளார்.

    நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    கைதான பூசாரி தனபால்
    ×